புது டெல்லி: ஐஎஸ்பிஏ எனப்படும் இந்திய விண்வெளி சங்கத்தை வரும் திங்கள்கிழமை (அக்.11) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இதனைத் தொடங்கி வைக்கும் அவர், தொடர்ந்து விண்வெளித் துறையின் பிரதிநிதிகளுடன் உரையாட உள்ளார்.
இந்திய விண்வெளித் துறையின் கூட்டுக்குரலாக விளங்க உள்ள ஐஎஸ்பிஏ, விண்வெளி, செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கமாகும். அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் உள்பட இந்திய விண்வெளிக் களத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இச்சங்கம் இணைந்து செயல்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவான தற்சார்பு குறித்து எதிரொலிக்கும் வகையில், இச்சங்கம் இந்தியாவை தன்னம்பிக்கை, தொழில்நுட்ப ரீதியாக விண்வெளி அரங்கில் முன்னணி நாடாக மாற்ற உதவும்.
விண்வெளி, செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட முன்னணி உள்நாட்டு, உலகளாவிய நிறுவனங்களை ஐஎஸ்பிஏ பிரதிநித்துவப்படுத்துகிறது. அதன் நிறுவன உறுப்பினர்களில் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பாரதி ஏர்டெல், மேப்மைண்டியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ், அனந்த் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் இதன் உறுப்பினர்கள் ஆவர்.
கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இதன் இதர முக்கிய நிறுவனங்கள்.
இதையும் படிங்க:மருத்துவ ஊசிகள் ஏற்றுமதிக்கு மூன்று மாதம் தடை