பெங்களூரு:பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 6) கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் "இந்திய எரிசக்தி வாரம்" என்னும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள், 30,000 பிரதிநிதிகள், 1,000 கண்காட்சியாளர்கள், 500 பேச்சாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இவர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசை உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அதன்பின் பசுமை ஆற்றல் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மாலையில் துமகுருவில் உள்ள எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை பிரத்யேக கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும்.
அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இலகுரக ஹெலிகாப்டர்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள், இந்தியன் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. அதேபோல அனைத்து ரக ஹெலிகாப்டர்களையும் பழுதுபார்க்கவும், மேம்படுத்தவும் வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த திட்டம்.. உபா சட்டத்தின் கீழ் 3 பேர் கைது...