டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக கரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சல் தொற்று வேகமாக பரவி வருகிறது. புதன்கிழமை (இன்று) காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 1,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,026ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்ததால், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,30,813ஆக அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றால் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாராத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாட்டின் தற்போதைய கரோனா நிலவரம், இன்புளூயன்சா காய்ச்சல் பரவல் குறித்த விவரங்களை அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். மேலும் கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று எண்ணிக்கை குறித்த விவரங்களையும் குறிப்பிட்டனர்.
5 செயல் திட்டம்:கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பரிசோதித்தல், நோயைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், வழிகாட்டு நெறிமுறை ஆகிய 5 செயல் திட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வகங்கள் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும், தீவிர சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.