புதுடெல்லி: பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ஆம் ஆண்டு ஐ.நா. ஜுன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்தது.
அதன்படி, இன்று 7ஆவது சர்வேதச யோகா தினம் 'ஆரோக்கியத்திற்கான யோகா' எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதில், "ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது, யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை.
நம்பிக்கை ஒளியாகத் திகழும் யோகா
இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர்.
யோகாவின் முக்கியத்துவமும், ஆர்வமும் அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். துயரமான காலகட்டத்திலும் மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த யோகா உதவியது" என்றார்.