டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 19) டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் ஜோதியை பிரதமரிடம் ஒப்படைத்தார். அவர் அதை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். இந்த ஜோதி 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக சென்னை, மாமல்லபுரத்திற்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு இடத்திலும், மாநிலத்தின் செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் ஜோதியைப் பெறுவார்கள்.
ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தப் பின்னர் பேசிய பிரதமர், "இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவில் இருந்து தொடங்குகிறது. முதல் முறையாக, இந்த ஆண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் இந்தியா நடத்த உள்ளது.
நமது முன்னோர்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும், சிந்தனை வளர்ச்சிக்காக விளையாட்டுகளை கண்டுபிடித்தனர். செஸ் விளையாடுபவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாக உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா செஸ் விளையாட்டில் மேம்பட்டுள்ளது. இந்த ஆண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையில் புதிய சாதனை படைக்கும்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி ஓட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு FIDE (International Chess Federation) முதல் முறையாக இந்தியாவில் ஜோதி ஓட்டத்தை நடத்த முடிவு செய்தது. இந்த போட்டியில், 188 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'44ஆவது செஸ் ஒலிம்பியாட்' முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!