டெல்லி:நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட்.15) கொடியேற்றினார். அப்போது, இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இந்த நிகழ்வில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கரோனா தொற்று பேரிடர் காலம் என்பதால், தனி மனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இந்த சிறப்பான தருணத்தில், எனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் நாள் இது. கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய நமது மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் பாராட்டுகளுக்குரியவர்கள்.
54 கோடி பேருக்கு தடுப்பூசி
நம் நாட்டில், மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 54 கோடிக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாடும், தனது வளர்ச்சிப் பயணத்தில், புதிய தீர்மானங்களுடன் தன்னை முன்னெடுத்துச் செல்லும் நிலையில், நமக்கும் அந்த நேரம் வந்துவிட்டது.
நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும், பின்தங்கிய பகுதிகளையும் முன்னேற்ற வேண்டும். அதற்காக உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வோம்.
இந்த நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில், நாட்டை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் நம்மிடையே உள்ளனர். இந்த நாளில் அவர்களை பாராட்டும்படி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் நமது இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவித்துள்ளனர். இப்போது விளையாட்டு, உடற்தகுதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை மேம்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி