டெல்லி: பிரபல மைக்ரோ பிளாகிங் சமூக வலைதளமான ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட பக்கம் இன்று அதிகாலை ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரதமரின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் சிறிதுநேரம் முடக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரிடம் கூறியவுடன் பக்கம் உடனடியாக மீண்டும் மீட்கப்பட்டது. பக்கம் முடக்கப்பட்ட சிறிதுநேரத்தில் ஏதும் ட்வீட் பகிரப்பட்டிருந்தால் அதை தவிர்க்கவும்" எனப் பதிவிட்டுள்ளனர்.
பிரதமரின் பக்கம் முடக்கப்பட்டபோது, "பிட்காயினை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. அரசு 500 பிட்காயின்களை அதிகாரப்பூர்வமாக விலைக்கு வாங்கி, இந்திய மக்கள் அனைவருக்கும் பிரித்தளிக்க உள்ளது" என ட்வீட் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்து ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
பிரதமரின் பக்கம் மீட்கப்பட்ட பின்னர் மேற்கூறிய ட்வீட்டை அழித்து விட்டதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் பிரதமர் மோடியின் பக்கத்தை சுமார் ஏழு கோடி பேர் (73.4 மில்லியன்) பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிபின் ராவத் சர்ச்சை: இந்து மதம் மாறும் இஸ்லாமிய இயக்குநர்