மும்பை: பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த பிப்ரவரி மாதம் 92ஆவது வயதில் காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் "லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது" வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவை ஆற்றிய நபருக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும், அந்த வகையில் முதல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, இந்தியாவை உலக அரங்கில் நிலை நிறுத்திய தலைவர் என்பதாலும், அவரால் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளதாலும், அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கரின் 80ஆவது நினைவு தினத்தையொட்டி நாளை (ஏப்ரல் 24) மும்பையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. லதா மங்கேஷ்கரின் சகோதரியான உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்முவில் மோடியின் வருகைக்காக உச்ச கட்ட பாதுகாப்பு