ரூத்ரபிரயாக்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்று(அக்.21) கேதர்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த பாரம்பரிய உடை மற்றும் தொப்பி, இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக அளித்தது.
பிரதமர் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அங்கிருந்த பெண்மணி ஒருவர் தானே வடிவமைத்த பாரம்பரிய கைத்தறி ஆடையை பரிசளித்துள்ளார். குளிர் பிரதேசங்களுக்கு செல்லும்போது அந்த ஆடையை கட்டாயம் அணிவதாக பிரதமர் மோடி அந்த பெண்மணிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி, இன்று கேதர்நாத் பயணத்தில் அந்த உடையை அணிந்து, தனது வாக்கை காப்பாற்றியுள்ளார்.
பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணங்களின் போது, அந்தந்த பகுதியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் பங்கு கொண்டு அந்த மக்களின் உடையை அணிவது வழக்கம். கடந்த 73ஆவது குடியரசு தினத்தன்று உத்தரகாண்ட்டின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து பிரதமர் மோடியைப் பின்பற்றி, உத்தரகாண்ட்டில் முதலமைச்சர் உள்பட ஏராளாமான அரசியல் தலைவர்களும் இந்த பாரம்பரிய தொப்பியை அணியத் தொடங்கினர். தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை கவர இந்த தொப்பியை அணிந்து சென்றனர். அதேபோல் உத்தரகாண்ட்டுக்கு வரும் பிரபலங்களை வரவேற்கும்போதும் இந்த தொப்பியை வழங்கினர். ஒருமுறை முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு அந்த தொப்பியை வழங்கி வரவேற்றார்.
இதையும் படிங்க: கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்