டெல்லி: நமது நாடு சுதந்திரம் பெற்று 76ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், நாட்டின் 76வது சுதந்திர தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ண தேசியக் கொடியை தனது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படங்களாக மாற்றி உள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படங்களாக, தான் தேசியக் கொடியை மாற்றி உள்ளது போன்று, நாட்டு மக்களும், தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றி அமைக்குமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், நாட்டு மக்கள், தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படமாக மூவர்ண தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் நமது நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் வகையிலான இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று (ஆகஸ்ட் 13) முதல் வருகிற 15ஆம் தேதி வரையிலான நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி’ (Har Ghar Tiranga) பிரச்சாரத்தில் இணைய வேண்டுமென பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.