டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 8) காணொளி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் வர்த்தகத்தில் 75 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் 2 பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி20 உள்ளது.
இந்தியா தனது சுதந்திர பெருவிழா ஆண்டில் ஜி20 தலைவர் பதவி வகித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஜி20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. நமது கருப்பொருள், ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம். இது அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. மோதல்களை வெறுக்கிறது.
உலக வரலாற்றில் மிக உயர்ந்த செழிப்பு மற்றும் இருண்ட கட்டத்தை நாம் கண்டிருக்கிறோம். பல படையெடுப்பாளர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கொடுமையான ஆட்சி அனுபவத்தோடு இந்தியா இங்கு வந்துள்ளது. அந்த அனுபவங்களே இன்றைய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப்பெரிய பலம். அனைத்து அரசுகளும், குடிமக்களும் இணைந்து இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்தனர். நாம் நமது முன்னேற்றத்திற்காக பாடுபடும்போது, உலகளாவிய முன்னேற்றத்தையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். இந்தியாவின் பல சாதனைகளை உலகின் பிற நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தியா ஒருபுறம் வளர்ந்த நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணிக்காத்து வருகிறது.
அதே சமயம் வளரும் நாடுகளின் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களுடன் நல்லுறவை வெளிப்படுத்துகிறது. உலகில் முதல் உலகமோ. மூன்றாம் உலகமோ இருக்கக்கூடாது. ஒரே உலகம் மட்டுமே இருக்க வேண்டும். ஜி20 மாநாடு மத்திய அரசின் ஒரு நிகழ்வு அல்ல. மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். நம் மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், அழகியல், ஒளி மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ராஜஸ்தான், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் விருந்தோம்பல் பண்புக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன. இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்புக்கான முறையான அறிவிப்புக்காக, வரும் வாரத்தில் இந்தோனேஷியா செல்லவிருக்கிறேன் எனத் தெரிவித்தார். அதோடு ஜி20 இந்தியாவின் இணையதளத்தையும் https://www.g20.in/en/ வெளியிட்டார்.
இதையும் படிங்க:வெப்பமண்டல காடுகளை விட சதுப்புநில காடுகள் 5 மடங்கு அதிக கார்பன் உமிழ்வை உறிஞ்சும் - பூபேந்தர் யாதவ்