டெல்லி:மகாகவி பாரதியின் நூறறாண்டு (1921-2021) நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக நேற்றைய நாள் சட்டப்பேரவையில், பாரதியின் நினைவு நாள் மகாகவி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், பாரதியின் பாடல்கள், கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாரதி நினைவு நாளையொட்டி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "சிறப்புவாய்ந்த சுப்பிரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவுகூருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச பாரதி விழாவில் அவர் உரையாற்றியது தொடர்பான காணொலியையும் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் உள்ளிட்டவர்களை அவ்வப்போது குறிப்பிட்டுப் பேசிவருவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
முன்னதாக, மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிவைக்க சென்னை வந்தபோது, பாரதியாரின் 'ஆயுதம் செய்வோம்' என்ற கவிதையைக் குறிப்பிட்டுப் பேசியது நினைவுகூரத்தக்கது.