புதுடெல்லி: இம்மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகப்பில் 27 அடி உயரம், 18 டன் எடை கொண்ட பிரம்மாண்ட நடராஜர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட சிலை, தமிழகத்தில் உள்ள கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ.P.கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் மற்றும் சக ஸ்தபதிகளின் உதவியோடு கிட்டத்தட்ட ஏழு மாத உழைப்பில் இச்சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையை வடிவமைத்த, சேனாதிபதி சிற்பக்கூடத்தைச் சார்ந்த ஸ்தபதிகள் 34 தலைமுறைகளாகச் சிற்பக்கலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி ஜி20 மாநாடு: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சாவூர் நடராஜர் சிலை!
மேலும் இந்த சிலை, இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவர் ஆச்சால் பாண்டியா தலைமையிலான குழுவின் மேற்பார்வையில், கடந்த மாதம் கனரக வாகனம் மூலம் கும்பகோணத்தில் இருந்து சாலை மார்க்கமாக, கர்நாடகா, தெலங்கானா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்கள் வழியே டெல்லி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இந்திரா காந்தி தேசிய கலை மையம், இந்த பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளதைக் குறித்தும், அதை வடிவமைத்த பழம்பெறு சிற்பக்கூட ஸ்தபதிகளைப் பற்றியும், தனது அதிகாரப்பூர்வமான X சமூக வலைத்தள பக்கத்தில், பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலையின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளது.
அந்த பதிவை மேற்கொள் காட்டி, பிரதமர் மோடி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், தமிழ் மொழியில் பதிவிட்டு இருந்தார். அதில், "பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: G20 India app: ஜி20 இந்தியா செயலியின் முக்கிய அம்சங்கள் என்ன?