தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ் மூதாட்டியின் காலைத் தொட்ட பிரதமர்.. வாஜ்பாய்க்குப் பின் மோடி.. சின்னப்பிள்ளைக்குப் பின் பாப்பம்மாள்.. - விவசாயி பாப்பம்மாளில் காலில் விழுந்த பிரதமர்

உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் பிரதமர் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

தமிழ் மூதாட்டியின் காலைத் தொட்ட பிரதமர்
தமிழ் மூதாட்டியின் காலைத் தொட்ட பிரதமர்

By

Published : Mar 18, 2023, 7:44 PM IST

டெல்லி: உலக சிறுதானியங்கள் மாநாடு டெல்லி சுப்பிரமணியம் ஹாலில் இன்று (மார்ச் 18) நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடியின் செயல் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்தியாவின் 19 மாவட்டங்களிலிருந்து தலா ஒரு விளை பொருள் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து 107 வயது மூதாட்டியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பங்கேற்றார். கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்த 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரது மகத்தான பணியை பாராட்டி 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.

இன்று டெல்லி நிகழ்ச்சியின் போது, பாப்பம்மாள் பிரதமருக்கு பொன்னாடை போர்த்தினார். இதனை வணங்கி ஏற்றுக் கொண்ட பிரதமர், உடனடியாக பாப்பம்மாளின் காலில் விழுந்து ஆசிபெற்றார். இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்மஸ் ரீவிருது அறிவிக்கப்பட்ட போது, பாப்பம்மாள் ஈடிவி பாரத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், விவசாயம் செய்வதற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்தவே இந்த தள்ளாத வயதிலும் விவசாயம் செய்து வருவதாகவும், நாட்டின் முதுகெலும்பான இந்த விவசாயத்தில் இன்றைய இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் தமிழ்நாட்டு பெண் ஒருவரின் காலில் பிரதமர் விழுந்து வணங்குவது இது முதன்முறை அல்ல. சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த பெண்ணான, சின்னப்பிள்ளையின் காலை தொட்டு வணங்கியிருக்கிறார் அன்றைய பிரதமர் வாஜ்பாய். 1999ஆம் ஆண்டு ஸ்த்ரீ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருந்தார் சின்னப்பிள்ளை.

இந்த விருது வழங்கும் விழாவின் போது இவரது பாதத்தைத் தொட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் வணங்கியது பேசு பொருளானது. சிறுசேமிப்பு திட்டம் மூலம் வறுமை ஒழிப்புக்கு வித்திட்டவர் சின்னப்பிள்ளை. 2020ஆம் ஆண்டு ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்த சின்னப்பிள்ளை, களஞ்சியம் என்ற இயக்கம் மூலம் வறுமை ஒழிப்புக்காக போராடியதை நினைவு கூர்ந்தார்.

தமிழ்நாடு மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்களில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடம், சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க போராடியதை பற்றி பேசிய அவர், தன்னை விட வயதில் மூத்தவரான அடல் பிஹாரி வாஜ்பாய் தனது காலில் விழுந்த போது, பதற்றத்தில் கை, கால்கள் நடுங்கி விட்டதாக கூறினார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசி பெற்றுள்ள பாப்பம்மாள், திமுக குடும்ப பாரம்பரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான போதும், திமுக போராட்டங்களில் பாப்பம்மாள் முன்னிலை வகித்ததை சுட்டிக்காட்டி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிங்க:பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details