ஒடிசா:ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நிலவும் நிலமை குறித்து அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தற்போது வரை 261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் இடர்பாடுகளின் இடுக்குகளில் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்தும், அதில் இருந்து மீண்டு வர உடனடியாக தேவைப்படும் விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஒடிசாவின் விபத்து நடந்த இடத்திற்கு இன்று பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், “பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து, அங்கு நிலவும் நிலைமையை ஆய்வு செய்ய புறப்படுகிறார்” என பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த துக்ககரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.