கர்நாடகா:இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென்மாநிலங்களுக்கு வந்து உள்ளார். நேற்று (ஏப்.8) தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறைவு பெற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்தார். அங்கிருந்து நேற்றிரவு பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார்.
தொடர்ந்து யானை பாகன்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து உரையாடுகிறார். அதன்பின்னர், கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்கிறார்.