டெல்லி :நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் அரசு அதன் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வீண் சண்டை சச்சரவுகளை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி வலி மிகுந்தது என்றும் வருத்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கூட்டு மனப்பான்மையுடன் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அதேநேரத்தில் அதற்கு இணையாக என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் அரங்கேறியது அதன் பின்னால் இருப்பவர்களின் பின்னணி மற்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரண்டு பேர் பாரவையாளர்கள் பகுதியில் இருந்து எம்.பிக்கள் இருப்பிடத்திற்குள் நுழைந்தது குறித்து சபாநாயகரும் அனைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.