ஐதராபாத் : அமெரிக்க சுற்றுப் பயணத்தின் இடையே உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் உரிமையாளருமான எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று (ஜூன். 20) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றார். யோகா விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வழங்கும் இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே அமெரிக்கா நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் டெஸ்லா நிறுவன ஆலையில் வைத்து எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கிய பின், முதல் முறையாக இருவரும் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் தனது கிளையை தொடங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சந்திப்பின் போது டெஸ்லா ஆலையில் நடைபெறும் இயக்க பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு, எலான் மஸ்க் கூறுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்தியாவில் டெஸ்லா கிளையை திறக்க விரும்புவதாக பிரதமர் மோடியிடம் அவர் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நிபுணர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எழுத்தாளர் மற்றும் வானியற்பியல் நிபுணரான நீல் டி கிராஸ் டைசன், பொருளாதார நிபுணர் பால் ரோமர், புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசிம் தலேப், முதலீட்டாளர் ரே டாலியோ, இந்திய-அமெரிக்க பாடகர் பாலு ஷா, எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜெப் ஸ்மித், முன்னாள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ப்ரோமான், தூதர் டேனியல் ரஸ்ஸல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் எல்பிரிட்ஜ் கோல்பி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :PM Modi US visit: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!