ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட கட்டுமான பணிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 8,379.62 கோடி ரூபாயாகும்.
முதல் கட்ட பணியில், சிக்கந்திரா - கிழக்கு தாஜ் கேட் இடையே நடைபாதை கட்டப்படவுள்ளது.
முதலமைச்சர் மேற்பார்வையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த நடைபாதையில் போக்குவரத்தானது டிசம்பர் 2022ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கந்திரா, கிழக்கு தாஜ் கேட் இடையே ஆறு ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதில், தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, ஜமா மசூதி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் நிலத்தடிக்கு கீழ் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தினால், நகரில் உள்ள 26 லட்சம் பேர் பயன்பெறவுள்ளனர். ஆண்டிற்கு, ஆக்ராவிற்கு 60 லட்சம் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். எம்ஆர்டிஎஸ் சேவை வழங்குவதன் மூலம் இவர்களும் பயன்பெறவுள்ளனர்" என்றார்.