டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் காணொலி வாயிலாக நேற்று (ஏப். 11) உரையாடினார். இதில், இருநாட்டின் உறவு குறித்து ஆலோசிக்கபட்ட நிலையில், முக்கியமானதாக ரஷ்யா - உக்ரைன் விவகாரம் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். மோடி தனது உரையின் தொடக்கத்தில், "நான் உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிபர்களுடன் பலமுறை தொலைபேசியில் உரையாடினேன்.
'அமைதியில் முடியும் என நம்புகிறோம்': அமைதியை நிலைநாட்டா இருவரிடமும் கோரிக்கை விடுத்தேன். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த புதினிடம் பரிந்துரை செய்தேன்.
உக்ரைனின் புச்சா நகரில் நடந்த தாக்குதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு நடந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் அந்த நேரத்தில், அதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான தற்போதைய பேச்சுவார்த்தைகள் விரைவில் அமைதியை நிலைநாட்டும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்க - இந்திய உறவு: தனது உரையின்போது அதிபர் பைடன்," அமெரிக்க - இந்திய மக்களின் நட்பும், அவர்கள் கொண்டுள்ள விழுமியங்களின் ஒற்றுமை ஆகியவைதான் இருநாட்டு உறவையும் பலப்படுத்துகிறது.
உக்ரைன் மக்களுக்காக இந்தியா மேற்கொள்ளும் மனிதநேய ரீதியிலான உதவிகளை நான் வரவேற்கிறேன்" என்றார். மேலும், அதிபர் பைடன், "ரஷ்யப் போர் குறித்து இந்தியா உடன் தொடர்ந்து நெருங்கிய ஆலோசனையில் ஈடுபடுவோம். தொடர் ஆலோசனையும், உரையாடலும் அமெரிக்க - இந்திய உறைவை வலுபெறச்செய்யும்" எனத் தெரிவித்தார்.
இயற்கை கூட்டணி: இந்தியா, உக்ரைனுக்கு மற்றொரு மருந்துகள் நிறைந்த சரக்குகளை அனுப்ப முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்நது பேசிய அவர், "கடந்தாண்டு செப்டம்பரில் நான் வாஷிங்டன் வந்தபோது, இந்திய -அமெரிக்க இடையேயான நல்லுறவு என்பது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் என நீங்கள் (ஜோ பைடன்) கூறுனீர்கள்.
அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உலகின் இரு பெரும் மற்றும் பழைமையான ஜனநாயக நாடுகளாகிய நாம், இயற்கையாகவே கூட்டணி நாடுகள்தான்" என்றார். இரு நாட்டு தலைவர்களின் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் சாகி நேற்று முன்தினம் (ஏப். 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கரோனா பெருந்தோற்று முடிவடைதல், பருவநிலை மாற்றம், உலக பொருளாதாரத்தை வலுபடுத்துதல், பாதுகாப்பை வலுப்படுத்த சர்வதேச அளவிலான ஒழுங்கை நிலைநிறுத்துதல் ஆகியவை குறித்து உரையாடுவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், "அமெரிக்க - இந்திய காணொலி உரையாடியலில் 22, இரு நாட்டு அமைச்சகங்கள் இடையேயும் சந்திப்பு நடைபெறும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையே நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி!