டெல்லி:அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிப்பர்ஜாய் புயல் தீவிர புயலாக மாறி, தற்போது அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயல் குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே வரும் 15ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் 15ஆம் தேதி வரை சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், கடற்கரை பகுதிக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் மேலும் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்பதால், கேரளா முதல் மகாராஷ்ட்ரா வரையிலான மேற்குக் கடற்கரைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரபிக் கடலை ஒட்டியுள்ள மாநிலங்கள் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்வதற்காக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்புக்காக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 11) இந்த மையத்தில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்து மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அங்குள்ள மழை நிலவரம் - அதன் பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
அதேபோல் பிப்பர்ஜாய் புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், பல விமானங்கள் தாமதமாக சென்றதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிப்பர்ஜாய் புயல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 12) உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் இல்லாததால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து!