டெல்லி: பிரதமர் மோடி நாளை (செப்.24) தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பிகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்: உதய்பூர் - ஜெய்ப்பூர், திருநெல்வேலி - மதுரை - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி, ராஞ்சி - ஹவுரா, ஜாம்நகர் - அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இந்த 9 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நினைவாக்குவதன் ஒரு படியாகும் எனவும், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் அது வேகமான ரயிலாக இருக்கும் எனவும், பயண நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்த உதவும் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலால் எவ்வளவு நேரம் மிச்சப்படுத்தப்படும்? ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடத்தில் உள்ள தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, வந்தே பாரத் ரயில்கள் அந்தந்த இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் மூன்று மணிநேரம் குறைக்கும். ஹைதராபாத் - பெங்களூரு 2.5 மணி வழித்தடத்தில் நேரத்திற்கும் மேலாகவும், திருநெல்வேலி - மதுரை - சென்னை வழித்தடத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம் மிச்சமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.