பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். காந்திநகரில் இருந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாவது ரயிலான இது, குஜராத்தின் காந்திநகர் முதல் மகாராஷ்டிராவின் மும்பை வரை இயக்கப்படும்.
முன்னதாக புதுடெல்லி - வாரணாசி மற்றும் புதுடெல்லி - கத்ரா உள்ளிட்ட வழித்தடங்களில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு மண்டல ரயில்வே சிபிஆர்ஓ சும்த் தாக்கூர் கூறுகையில், “வந்தே பாரத் ரயில் எண்ணற்ற சிறந்த வசதிகளை வழங்குகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கவாச் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இதன் அனைத்து வகுப்புகளிலும் சாயும் தன்மையுடன் கூடிய இருக்கைகள் மற்றும் எக்சிகியூட்டிவ் பெட்டிகளில் 180 டிகிரி அளவில் சுழலும் இருக்கைகள் உள்ளன. 160 கி.மீ. வேகத்தில் சென்றாலும், பயணிகள் முழு பாதுகாப்பை உணரலாம்” என கூறினார்.
மேலும் இதுகுறித்து பேசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் லோகோ பைலட் கே.கே.தாக்கூர், "இந்த ரயிலில் ரியர் கேமராக்கள் உள்பட நான்கு பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் பவர் கார்கள் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலம் சுமார் 30 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த அவசர சூழ்நிலையிலும், லோகோ பைலட் மற்றும் ரயில்வே காவலர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் பயணிகளுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்” என்றார்.
மேலும் இந்த புதிய வந்தே பாரத் ரயில்களில் சாய்வு இருக்கைகள், தானியங்கி பயர் சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள், வைபை வசதி, மூன்று மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆகஸ்ட் 2023 க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய ஐசிஎப் தனது இலக்கை நிர்ணயித்துள்ளது. அதேநேரம் புதிய ரயில்களின் பெட்டிகள் பழைய ரயில்களை விட இலகுவாக இருக்கும். ரயிலின் எடை 38 டன் குறைக்கப்பட்டு 392 டன்னாக உள்ளது.
மேலும் இரண்டு அடி வெள்ளம் தண்டவாளத்தில் இருந்தாலும், தொடர்ந்து இதனை தொய்வின்றி இயக்க முடியும். இவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டவை. குறைந்த எடை காரணமாக, அதிக வேகத்தில் கூட பயணிகள் கூடுதல் வசதியாக உணர்வார்கள்.
இதையும் படிங்க:அதிவேக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... 180 கி.மீ வேகத்தை எட்டி சாதனை...