டெல்லி: இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நாளை (டிசம்பர் 22) தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இணைய வழியில் நடைபெறும் இந்த அறிவியல் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யார் நடத்துகிறார்கள்
மக்களிடையே அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை விஞ்ஞான பாரதியுடன் இணைந்து இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.
4 நாள்கள் திருவிழா
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்கும் விழாவாக உள்ளது. இந்நிலையில், ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா டிசம்பர் (22-25) வரை நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது.