டெல்லி: ரஷ்யா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (நவ.17) கலந்துகொள்கிறார். இம்மாநாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரு தரப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத தடுப்பு, வணிகம், ஆரோக்கியம், எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்- Brazil-Russia-India-China-South Africa -BRICS) நாடுகளுக்கு இடையேயான இந்த பிரிக்ஸ் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஜூன் 15-16ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி வன்முறை தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தியா லடாக் எல்லையை நிரந்தரமாக மூடியுள்ளது, சீனா, இந்தியா உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எல்லையில் அவ்வப்போது போர் பதற்றம் வந்து மறைகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் காணொலி வாயிலாக ஒருவருக்கொருவர் சந்திக்க உள்ளனர்.