டெல்லி: மாநில உள்துறை அமைச்சர்கள், மாநில உள்துறை செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கான "சிந்தன் ஷிவிர்" (சிந்தனை அமர்வு) கூட்டம், ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் நடைபெறவுள்ளது. மத்திய அரசு சார்பில், நாளை(அக்.27) மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், மாநில உள்துறை அமைச்சர்கள், மாநில உள்துறை செயலாளர்கள், மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகள், மத்திய காவல்துறை அமைப்புகளின் (CPOs) தலைமை இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் நாளை மறுநாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். காவல் படைகளின் நவீனமயமாக்கல், சைபர் கிரைம் மேலாண்மை, குற்றவியல் நீதி அமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு, கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மத்திய- மாநில பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்த சிந்தனை அமர்வு கூட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.