டெல்லி: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கானொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்வில் கானொளிக் காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, “இந்தியா - இலங்கை இடையிலான வர்த்தகம் மற்றும் பன்முகம் கொண்ட உறவில் ஒரு புதிய பகுதியை தொடங்கி உள்ளோம். நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்கியதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கிய வலிமை கிடைத்து உள்ளது. இந்தியா - இலங்கை இடையில் ஆழமான கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் குடிமையியல் வரலாறு உள்ளது.
இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் உடன் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் கடல்வழி வாணிபத்தை நீண்ட காலமாக கொண்டு உள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஒரு வரலாற்று முனையமாக பூம்புகார் துறைமுகம் இருந்திருக்கிறது. சங்க கால இலக்கியங்களாக பட்டினப்பாலை மற்றும் மணிமேகலை ஆகியவை இந்தியா - இலங்கை இடையிலான படகு மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளன.
சிறந்த புலவரான சுப்ரமணிய பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற வரிகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளைக் குறிக்கிறது. எனவே, இந்த கப்பல் போக்குவரத்து சேவையானது நமது வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை உயிர்ப்பித்து உள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே உடனான சந்திப்பின்போது, நாங்கள் பொருளாதார உறவுகள் குறித்து ஆலோசனை செய்தோம். உறவை வலுப்படுத்துதல் என்பது இரண்டு நாடுகள் இணைந்து செயல்படுவது மட்டுமல்ல. இரு நாட்டு மக்களும், இரு நாட்டவரின் இதயங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.