டெல்லி:மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ராஷ்டிரிய ரோஜ்கர் மேளா (Rashtriya Rozgar Mela), நாட்டில் 45 இடங்களில் நடைபெற்றது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 51,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 28) கானொலிக் காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனையடுத்து இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டில் மருந்து மற்றும் ஆட்டோ மொபைல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் இளைய சமுதாயத்தினருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் இந்திய பொருளாதாரம் பல்வேறு வகைகளில் அதிகப்படியான வளர்ச்சியை அளிக்கும்.
இதில், மருந்து மற்றும் ஆட்டோமொபைல் துறை ஆகியவற்றோடு இணைந்து சுற்றுலாத் துறையும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் 20 லட்சம் கோடி பொருளாதார வாய்ப்பை உருவாக்கும். இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறையில் 13 முதல் 14 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த பத்து ஆண்டுகளில் இந்தியா, உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறும். இதனை நமது நாடு அடைவதற்கான பொறுப்பாக அனைவரும் உணர வேண்டும். புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் ‘அம்ரித் ரக்சாஸ்’ என அழைக்கப்படுவர். ஏனென்றால், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உருவாக்க உள்ளனர்” என தெரிவித்தார்.
இந்த பணி நியமனத்தில் உள்துறை அமைச்சகத்தின் கீழான மத்திய ஆயுதப்படை காவல், மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, சாஷ்டிர சீமா பால், அசாம் ரைபிள்ஸ், இந்தோ-திபெத்திய எல்லை காவல் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் டெல்லி காவல் துறை ஆகியவற்றில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி), துணை காவல் ஆய்வாளர் (பொதுப்பணி) மற்றும் பொதுப்பணி அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல், துணை ராணுவப்படையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், கரம்யோகி பிரராம்ப், ஐகாட் கரம்யோகி இணையதள போர்ட்டல் உள்பட 673 இ-கற்றல் படிப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. இவை ‘anywhere any device' என்ற கற்றல் முறையின் மூலம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Jan Dhan Yojana: இந்தியாவின் நிதி சேர்ப்பு கொள்கையில் மாபெரும் புரட்சி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்.!