டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துகளை தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸும் வெற்றியைத் தழுவினார்.
இந்த வெற்றியை அடுத்து, உலக தலைவர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியில் தனது வாழ்த்துகளை ட்விட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடி ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடியதாக பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்.
அவருக்கு எனது வாழ்த்துகளை பதிவுசெய்தேன். இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்குமாறு கூறினேன். இவர்களது வெற்றி இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும். மேலும், இவர்களின் வெற்றியின் மூலம், துடிப்பான கூட்டணி நடவடிக்களைக் கொண்டு, நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.