டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தான் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் உலகின் சிறந்த மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும் என்று தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றல் உள்ளது என்றும் அதிகாரமளிக்கும் பிராண்டாக மாநிலம் மாறி வருவதாகவும் மாநிலத்தில் முதலீடு செய்ய அதிகளவில் முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய குறிப்பிட்டத்தக்க வகையில் வளர்ச்சியை கண்டு உள்ளதாகவும், முன்னதாக மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடிய நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமைக் கோட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டில் நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகவும் நாம் உள்ளூருக்கு குரல் கொடுப்பவர்களாகவும், உலகத்தின் உள்ளூராகவும் மாற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், டெல்லி - டேராடூன் இடையிலான பயண போக்குவரத்து 2 மணி நேரமாக குறைக்கும் விரைவுச் சாலை விரைவில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று [பிரதமர் மோடி தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை அக்கட்சி எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :நாடாளுமன்றம் டிச.11 வரை ஒத்திவைப்பு - மஹுவா பதவி நீக்கத்தை தொடர்ந்து அறிவிப்பு!