டெல்லி:வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று(மே.29) முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையாகும்.
இந்த ரயில் அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரையும், மேற்குவங்க மாநிலத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கிறது. இந்த வழித்தடத்தின் பயண நேரத்தை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு மணி நேரம் வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில்கள் மோதலை தடுக்கும் கவாச் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, "முந்தைய ஆட்சியாளர்களால் வடகிழக்கு மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில்வே பட்ஜெட் 2,500 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 10,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நான்கு மடங்கு வளர்ச்சியாகும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் அகல ரயில்பாதை விரைவில் அமைக்கப்படும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா வரலாறு காணாத சாதனைகளை புரிந்துள்ளது. பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்தது. எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.