டெல்லி :பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணி என்றும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகளை காட்டிலும் முன்னணியில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கட்சிகள் இரு அணிகளாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மும்முரம் காட்டி வருகிறது.
அதேநேரம், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிராந்திய லட்சியங்களை நிறைவேற்ற பாஜக உறுதி கொண்டு உள்ளதாக பதிவிட்டு உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டை பலப்படுத்தவும், சேவை செய்யவும் சிறந்த கூட்டணி என்று தெரிவித்தார்.