டெல்லி:பொங்கல் பண்டிகை 'ஒரே பாரத் சிறப்பான பாரத்' என்ற தேசிய உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும், காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஆகியவற்றில் இதே போன்ற உணர்வுப்பூர்வமான தொடர்பை காண முடிந்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 14) தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” என தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக அமையவும், பொதுமக்கள் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவுடன் இருக்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.
கோலம் பிரபலமான கலை வடிவம். இதன் மூலம், இந்தியாவின் ஒற்றுமையை வரைய வேண்டும். நாட்டின் ஒவ்வொரு இடங்களிலும் உணர்வுப்பூர்வமான இணைப்பை ஏற்படுத்தும் போது, தேசத்தில் வலிமை, புதிய வடிவம் பெறும். கோலம் வரவேற்புச் சின்னமாகவும், மங்களகரமான அடையாளமாக உள்ளது.
பொங்கல் பண்டிகை, 'ஒரே பாரத்' 'சிறப்பான பாரத்' என்ற தேசிய உணர்வை பிரதிபலிக்கிறது. காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஆகியவற்றின் போது, இதே போன்ற உணர்வுப்பூர்வமான தொடர்பை காண முடிந்தது எனத் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சியை உருவாக்கும். "ஒற்றுமை உணர்வின் மூலம் 2047 வளர்ந்த பாரத்" உருவாக்க முடியும். திருவள்ளுவரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகையின் போது, புதிய நெற்பயிர்களைக் கடவுளுக்குப் படைத்து, பாரம்பரிய முறைப்படி கொண்டாடக் கூடிய நிகழ்வாகும். இதே போல், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இடங்களிலும் கொண்டாடக்கூடிய பண்டிகையிலும் கிராமப்புற பயிர் மற்றும் விவசாயத் தொடர்புகள் குறித்து பேசினார்.
தமிழ் மரபிற்கும், திணைக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி பேசிய பிரதமர், பல இளைஞர்கள் திணை குறித்து அறிந்து, தனது தொழிலில் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளதாகவும், அது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், திணை விவசாயம் மூலம், மூன்று கோடிக்கு அதிகமான விவசாயிகள் நேரடியாக பயன் அடைந்து உள்ளதாகத் தெரிவித்தார்.
'ஒரே பாரத்' 'சிறப்பான பாரத்' என்ற மத்திய அரசின் முயற்சி அனைவரின் ஒற்றுமைக்கானது. இந்தியாவிலுள்ள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாழும் மக்களின் தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பொங்கல் திருநாளில், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த தீர்மானம் எடுப்போம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க:மார்ச்.15க்குள் கெடு! மாலத்தீவு அரசின் அடுத்த நடவடிக்கை! எப்படி திருப்பி கொடுக்கும் இந்தியா?