தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சகங்களை மதிப்பாய்வு செய்யும் மோடி!

உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அமைச்சகங்களையும் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்துவருகிறார். தற்போதைய அமைச்சரவையில் விரிவாக்கம் அல்லது மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் குறித்த யூகங்கள் உள்ளன, ஏனெனில் உத்தரப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்
ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்

By

Published : Jun 15, 2021, 9:36 AM IST

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அமைச்சகங்களின் அறிக்கை அட்டையையும் பிரதமர் அலுவலகம் தயாரிக்கிறது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில், இந்த அமைச்சகங்களின் உள் தரவரிசை, மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இருப்பினும், ஆதாரங்களின்படி, இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அமைச்சகங்களையும் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்துவருகிறார். இந்தப் பணியில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரும் பிரதமருடன் இணைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக தற்போதைய அமைச்சரவையில் விரிவாக்கம் அல்லது மாற்றங்கள் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

ஆதாரங்களின்படி, மோடி அரசு 2.0-இன் அனைத்து அமைச்சகங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு அதற்கேற்ப மாற்றப்படும். இதுவரை, பின்வரும் அமைச்சகங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன:

  • வேளாண்மை மற்றும் உழவர் நலன்,
  • ஊரக வளர்ச்சி,
  • நிலக்கரி மற்றும் சுரங்கம்,
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்,
  • சிவில் விமான போக்குவரத்து,
  • ரயில்வே,
  • சுற்றுலா மற்றும் கலாசாரம்,
  • பழங்குடியினர் விவகாரங்கள்,
  • மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி,
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,
  • சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம்,
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்,
  • வட கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சி.

2019 முதல், மத்திய அமைச்சரவையில் எந்த விரிவாக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பல முக்கியத் தலைவர்களுடன் சமீபத்தில் பிரதமரைச் சந்தித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்

தகவல்களின்படி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்னா தால் தலைவர், அனுப்ரியா படேல், ஜோதிராதித்ய சிந்தியா, மேற்கு வங்க பாஜக தலைவர் சுபேந்து ஆதிகாரி, மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், பிகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி, எல்ஜேபி ராஜ் சிங், ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோர் அமைச்சரவை அமைச்சகங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.

இருப்பினும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் (சி.சி.எஸ்.) கீழ் வரும் உள் துறை, பாதுகாப்பு, நிதி, வெளி விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகிய முக்கியமான அமைச்சகங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த முக்கியமான அமைச்சரவை விரிவாக்கம் வரவிருக்கும் பருவமழைக் கூட்டத்திற்கு முன்பாகவே செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details