டெல்லி : டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் வருகை மிகவும் முக்கியமானது. ஏனெனில் 2020 மார்ச் முதல் கோவிட் -19 கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
அதன் பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் முதல் வெளிநாட்டுத் தலைவர் (பெண்மணி) மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) ஆவார்.
இந்தியா- டென்மார்க் ஆகிய இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தூய்மையான தொழில்நுட்பங்கள், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஸ்மார்ட் (சீர்மிகு) நகரங்கள், கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுவான ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்நிலையில், டென்மார்க் இந்தியாவை 'நெருங்கிய கூட்டாளியாக' கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், தனது டெல்லி வருகை இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு ஒரு மைல்கல்லாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவை நெருங்கிய கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். இந்த வருகை டென்மார்க்-இந்தியா இருதரப்பு உறவுகளுக்கான ஒரு மைல்கல்லாக நான் பார்க்கிறேன்” என்றார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மூன்று நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.