ஹைதராபாத்:சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக தென்னாப்ரிக்கா சென்று இருந்த நிலையில், அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி கானொலி காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜீலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட முதல் விண்கலம் சந்திரயான் 3 ஆகும். சந்திரயான் 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணித்து நிலவை சென்றடைந்துள்ளது. நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்கிறது. மின்னுாட்டம், நிலநடுக்க அதிர்வுகள், தட்ப வெப்பநிலை குறித்தும் லேண்டர், ரோவர் ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்ரிக்காவில் இருந்து கானொளி மூலம் சந்திரயான்-3 தரையிறங்கும் காட்சியைப் பார்வையிட்டார். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட பின், தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியினை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன் பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், இந்தியா வரலாறு படைத்துள்ளது. உலகெங்கும் இந்தியாவின் வெற்றி எதிரொலித்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி 140 கோடி மக்களின் வெற்றி. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று புதிய இந்தியா உருவாகியுள்ளது. இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது.