டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று(மே.28) காலை திறக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதேபோல், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய தமிழ்நாட்டின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவினார். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. அப்போது, சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி புதிய நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இன்று தனது மன்- கி- பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி சாவர்க்கரின் ஆளுமை குறித்து பேசினார். சாவர்க்கர் மிகவும் வலிமையான ஆளுமை என்றும், அவரது அச்சமற்ற மற்றும் சுயமரியாதை குணம் அடிமை மனப்பான்மையை சகித்துக் கொள்ளாதது என்றும் தெரிவித்தார். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான சாவர்க்கரின் பிறந்தநாளில், அவரது தியாகம், தைரியம் மற்றும் உறுதிப்பாடு கொண்ட கதைகள் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்தார்.