சுதந்திர இந்தியாவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். கல்வியாளர், தேர்ந்த அரசியல்வாதி, நீதித் துறை நிபுணர், சிறந்த பொருளாதார வல்லுநர் எனப் பன்முகம் கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் உரிமைக்காகவும் போராடினார்.
அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும் சமூக ஜனநாயகம் குறித்து அனைவருக்கும் எடுத்துரைத்தவர். அம்பேத்கரின் தலைமையின்கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நாட்டை ஒருங்கிணைத்து அனைவருக்குமான அரணாகத் திகழ்ந்துவருகிறது.
இந்நிலையில், அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகுவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்திவருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குத் தலைவணங்குகிறேன்.
விளிம்புநிலை மக்களை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் கொண்டுவருவதற்காக அவரது போராட்டம் பல தலைமுறைகளைக் கடந்தும் எடுத்துக்காட்டாக விளங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.