போபால் (மத்தியப் பிரதேசம்): நாட்டிலேயே முதல் ஐஎஸ்ஓ-9001 தரச்சான்றிதழ் பெற்ற ரயில் நிலையமான ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.15) திறந்து வைக்கிறார்.
1979ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்க 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
’ஹபீப்கஞ்ச்’ டூ ’ராணி கமலாபதி’ ரயில் நிலையம்
முன்னதாக ஹபீப்கஞ்ச் என்று அழைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற ஹைடெல்பெர்க் ரயில் நிலையத்தைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்றிய அரசின் அரசிதழ் அறிவிப்பின்படி நவம்பர் 13ஆம் தேதி ’ராணி கமலாபதி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேம்பட்ட பயணிகள் வசதி
இந்த ரயில் நிலையத்தில் சுமார் 300 கார்கள், 800க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள், டாக்சிகள், பேருந்துகளை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவீன உணவகம் ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ள நிலையில், காஸ்மெடிக் சென்டர் ஸ்பா, சலூன் வசதி, குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக பொம்மை ரயில் உள்ளிட்ட வசதிகள் விரைவில் இங்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு படிக்கட்டுகளுக்கு பதிலாக சாய்வுதளம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு, சக்கர நாற்காலிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தவிர ரயில் நிலையத்தின் புதிய கட்டடத்தில் 660 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Babasaheb Purandare: பத்ம விபூஷண் விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் பாபாசாஹேப் காலமானார்