டாக்கா: வங்க தேசத்தின் தென்மேற்கு மாவட்டமான சக்திஹிரா, ஈஸ்வரிபூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 27) வழிபாடு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள்கள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ளார். இந்நிலையில், காளி கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வேத மந்திரங்களை முழங்கி காளியை வணங்கினார்.
இந்தக் காளி கோயில் 51ஆவது சக்தி பீடமாக அமைந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்து மன்னரால் கட்டப்பட்டது. இப்பகுதி வங்கதேசம்-இந்திய எல்லை அருகே அமைந்துள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 2015ஆம் ஆண்டு டாக்காவில் அமைந்துள்ள தக்கேஸ்வரி கோயிலில் வழிபாடு நடத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது காளி கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
வங்க தேச காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு! வங்க தேச காளி கோயிலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. இதையடுத்து பிரதமரின் வருகைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 15.89 கோடி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நாட்டில், 1.70 கோடி இந்துக்கள் வாழ்கின்றனர்.