புதுடெல்லி : இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.
தேசத்தின் மகள் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அன்பும், அக்கறையும் கொண்ட மூத்தச் சகோதரி லதா மறைந்தார் என்ற செய்தி சொல்லொண்ணா வேதனையை தருகிறது.
அவர் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். வருங்கால சந்ததியினர் அவரது கலாசார கலை பங்களிப்பை நினைவு கூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மயக்கும் இணையற்ற திறன் கொண்டது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “லதா மங்கேஷ்கர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சியிலும் உறுதியாக இருந்தார்” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்வீட்டில், “லதா அக்காவின் பாடல்கள் பல்வித உணர்வுகளை வெளிப்படுத்தின. இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் பல தசாப்தங்களாக கண்டார். திரைப்படங்களுக்கு அப்பால் நாட்டின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான, வளர்ச்சியடைந்த இந்தியாவை காண விரும்பினார்” எனத் தெரிவித்திருந்தார்.
மூன்றாவது ட்வீட்டில் “அக்கா லதாவிடம் பாசத்தைப் பெற்றேன்”, 'ஓம் சாந்தி' எனக் கூறியுள்ளார். இது குறித்து அவர், “லதா அக்காவிடம் எப்போதும் பாசத்தைப் பெற்றேன். அவரின் அளவற்ற பாசத்தை பெற்றத்தை பெரும் மரியாதையாக கருதுகிறேன். லதா அக்காவின் மறைவால் சககுடிமக்கள் போல் நானும் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். ஓம் சாந்தி” எனக் கூறியுள்ளார்.
வயது முதிர்வு பிரச்சினைகள் மற்றும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மாதம் முதல் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலமானார்.
இதையும் படிங்க : 'மெலடி குயின்' லதா மங்கேஷ்கர் வாழ்க்கை பயணம்