மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை.18) தொடங்கவுள்ள நிலையில், இன்று பிற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சி நிறைவு பெறுகின்ற வேளையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
நேர குறைப்புக்கு வைகோ எதிர்ப்பு
கூட்டம் முடிகின்ற வேளையில் பேசிய கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து, 'குறைந்த நேரம் பேசுங்கள்' என்று பிரகலாத் ஜோஷி சொன்னபோது, வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஒரு கட்சிக்கு ஒருத்தரை பேச அனுமதியுங்கள்
அப்போது வைகோ பேசுகையில், 'இந்தக் கூட்டத்தில் ஒரு கட்சிக்கு ஒருவரைத்தான் பேச அனுமதித்திருக்க வேண்டும். பல கட்சிகளில் இரண்டு உறுப்பினர்களைப் பேச அனுமதித்தீர்கள். அதனால், எங்களைப் போன்ற மற்ற கட்சிகளுக்கு நேரத்தைக் குறைக்கின்றீர்கள்.
ஆபத்தான பாதையில் இந்தியா
இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள். சமூக நீதியை, சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.
ஒருமைப்பாடு நிலைக்க... அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்
எண்ணற்ற தலைவர்களும், தொண்டர்களும் எத்தனையோ தியாகங்கள் செய்து விடுதலை பெற்றோம். இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால், இன்றைய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும்.