டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி), டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் புறப்பட்டுச் சென்றார். பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக, தனது பிரான்ஸ் பயணம், இந்தியா - பிரான்ஸ் இருதரப்பு கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில், இந்த இருநாட்டு உறவை முன்னெடுத்துச் செல்வது குறித்து அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுடன் விரிவான விவாதங்களை நடத்த ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனின் அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி பாரீஸ் செல்கின்றார். அங்கு ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த அணிவகுப்பில், இந்திய நாட்டு முப்படைகளின் ஆயுதப் படைகளும் பங்கேற்க உள்ளன.
பிரான்ஸ் பயணத்தின் போது, பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய சட்டசபை தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார். பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்திய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் நாட்டின் முக்கியப் பிரமுகர்களுடன் தனித்தனியாக உரையாட உள்ளார்.
"பிரான்ஸ் அதிபர் மாக்ரோனைச் சந்திப்பதற்கும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்த நீண்டகால மற்றும் முக்கியத்துவம் சார்ந்த இந்த கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வது குறித்து பரந்த அளவிலான விவாதங்களை நடத்துவதற்கு" ஆவலாக உள்ளதாக, பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இருந்து, பிரதமர் மோடி, ஜூலை 15ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபிக்கு, அதிகாரப்பூர்வ பயணமாகச் செல்கிறார். தனது ஐக்கிய அரபு அமீரக பயணத்தில், மோடி, "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளரும் எனது நண்பரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாடுகளின் வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, ஃபின்டெக், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் வலுவான மக்களிடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உள்ளன'' என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.
ஜூலை 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 2014ஆம் ஆண்டில் மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு, வளைகுடா நாட்டிற்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இது ஆகும். கடந்த காலங்களில், ஜூன் 2022, ஆகஸ்ட் 2019, பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2015 ஆகிய மாதங்களில் பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு விஜயம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாெறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி!