டெல்லி : 15வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். இந்தியா - சீனா இடையிலான எல்லைத் தகராறு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அது தொடர்பாக இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகின் வளரும் பொருளாதாரமிக்க நாடுகளின் கூட்டமைப்பு பிரிக்ஸ் . இதன் உறுப்பினர்களாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் 15வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளார். கரோனா காரணமாக காணொலி காட்சி மூலம் நடைபெற்று வந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு, 2019ஆம் ஆண்டுக்கு பிறகு நேரடியாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்ததை அடுத்து பிரதமர் மோடி அங்கு புறப்பட்டு சென்று உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட். 22) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களான சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதுதவிர பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர்.
எரிசக்தி, அறிவியல், சுகாதாரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், உலகளாவிய பிரச்சினைகள், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயை அமல்படுத்துவது தொடர்பாக இந்த உச்சி மாநாட்டில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்திய - சீனா இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பிரதமர் மோடி தலையீட்டு இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (ஆகஸ்ட் 22) முதல் 24ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவின், ஜோகன்னஸ்பார்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்து கையோடு பிரதமர் மோடி 25ஆம் தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Valli Arunachalam: யார் இந்த வள்ளி அருணாச்சலம்? - முருகப்பா குழுமத்தில் இவரது முக்கியத்துவம் என்ன?