இந்திய விண்வெளி சங்கத்தை (ISpA)) நரேந்திர மோடி இன்று(அக்.11) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், "பாரத ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண், பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஆகிய நாட்டின் இரண்டு மகத்தான தலைவர்களின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு மகத்தான ஆளுமைகளும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவுக்குப் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் முயற்சியுடன் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய மாற்றங்களை யதார்த்தமாக மாற்றுவது எவ்வாறு என்பதை இவர்கள் காண்பித்தனர்.
இன்று இருப்பது போல் இந்தியாவில் தீர்மானமான அரசு ஒருபோதும் இருந்ததில்லை. விண்வெளித் துறையிலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீர்த்திருத்தங்கள் இதற்கு உதாரணமாகும். இந்திய விண்வெளி சங்கம் அமைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
விண்வெளித் துறை என்பது 130 கோடி இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான வழியாகும். சாமானிய மக்களுக்கு சிறந்த வரைபடம் தயாரித்தல், உருவப்படுத்துதல், தொடர்பு வசதிகளை உருவாக்க வேண்டியது துறையின் கடமையாகும். மீனவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, வருவாய், இயற்கை சீற்றம் குறித்த முன்னறிவிப்புக்கும் இந்தத் துறை பெரிதும் பயன்படுகிறது.
தற்சார்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல. அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தியாகும். இந்த உத்தி, இந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களின் திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் ஆற்றல் மிக்க இடமாக இந்தியாவை மாற்றும். இந்த உத்தி, உலகளாவிய வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யும். இந்தியாவில் மனிதவளம் மற்றும் திறமையை உலகளவில் விரிவுபடுத்தும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மூவர்