டெல்லி: 'விஸ்வகர்மா ஜெயந்தியை’ முன்னிட்டு பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களின் நலனுக்காக 'பிஎம் விஸ்வகர்மா' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று ரூ.5,400 கோடி மதிப்பில் துவாரகாவில் அமைந்துள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தினையும் மோடி (IICC) திறந்து வைத்தார்.
பின் கலைஞர்கள் மற்றும் கைவினையாளர்களுடன் மோடி உரையாற்றினார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசும்போது, கைவினைக் கலைஞர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சியின்போது நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்த நண்பர்கள் விஸ்வகர்மாக்கள் (கைவினைக் கலைஞர்கள்) என கூறினார்.
கடவுள் விஸ்வகர்மாவின் ஆசிர்வாதத்துடன் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா இன்று (செப்.17) தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பாரம்பரியத்துடன் கைவினை மற்றும் கருவிகள் உடன் பணிபுரிய புதிய நம்பிக்கையை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க:"உண்டியல் பணம் மட்டும் தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு வேண்டுமா?"... மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மேலும் பிரதமர் மோடி கூறும்போது, “கைவினைக் கலைஞர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடைகளில் மட்டும் கருவிகள் வாங்க வேண்டும். 'பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தின்படி ரூ.13,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு பிரதான் மந்திரி விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் அடிப்படை மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கால ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்கப்படும். பயிற்சிகள் முடிந்த பின் கருவிகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் மற்றும் இரண்டாம் தொகை ரூ.2 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த கடனுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத வட்டி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்கு உதவிகள் செய்யப்படும்” என தெரிவித்தார்.
இந்த கைவினைக் கலைஞர்கள் திட்டத்தின் கீழ், 18 பாரம்பரிய கைவினைப் பொருட்கள் உள்ளன. அவை, தச்சர், கவச தயாரிப்பு, படகு தயாரிப்பு, கொல்லன், சுத்தியல் உள்பட கருவி தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், சிற்பி மற்றும் கல் உடைப்பு, கொத்தனார் பயிற்சி, மண்பாண்டம் செய்தல், காலணி தயாரிப்பு, கூடை - பாய் மற்றும் துடைப்பம் தயாரிப்பு, பொம்மை தயாரிப்பு, முடித்திருத்துதல், பூ மற்றும் மாலை கட்டுதல், சலவைத் தொழில், தையல் தொழில் மற்றும் மீன்பிடி வலை செய்பவர் ஆகியோர் உள்ளனர்.
இன்று துவாரகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தில் (IICC) 70,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இதில் முக்கிய அரங்கம் மற்றும் மாநாட்டு அறைகள் உள்ளன. இங்கு 10,000 நபர்கள் இருக்கக் கூடிய நடன நிகழ்ச்சிகளுக்கான பெரிய அறை உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வதற்கு முன்பு துவாரகாவில் உள்ள புதிய மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், அந்த மெட்ரோ ரயிலிலும் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
இதையும் படிங்க:PM Modi : பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.. நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!