தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பையில், ஆடவர் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை வீழ்த்தி தங்கம் வென்றது.
1949ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் 1952,1955,1979ஆம் ஆண்டுகளில் மட்டும் அரை இறுதி வரை மட்டுமே முன்னேறி இருந்த இந்திய ஆடவர் அணி முதன்முறையாக இந்தாண்டு இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதில் முதல்மூன்று கேம்களில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றதுடன் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
டெல்லி:இந்த நிலையில் நாடு திரும்பிய இந்திய பேட்மிண்டன் அணியினரை பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ’இதற்கு முன்னர் இந்திய அணி பலமுறை தாமஸ் கோப்பைத் தொடர்களில் பங்கேற்றபோது இப்படி ஒரு தொடர் நடக்கிறது என்பதே நாட்டு மக்களுக்குத் தெரியாது; ஆனால் தற்போது நீங்கள் பெற்றுள்ள வெற்றி இந்தியர்களை பெருமை அடையச் செய்துள்ளது’ எனக்கூறினார்.
மேலும் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்திய ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இவ்வளவு பெரிய தொடரில் இந்தியாவை வழிநடத்துவது எளிதல்ல என்று குறிப்பிட்டார். தொடர்ந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:Chessable Masters: தவறிழைத்த கார்ல்சன் - ஒரே நகர்வில் சாய்த்த பிரக்ஞானந்தா