வாரணாசி (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று (செப் 23) அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.121 கோடி மதிப்பில், 30 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளன. இதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.330 கோடி ஒதுக்கியுள்ளன.
30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மைதானம் சுமார் 30,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளன. ராஜதலாப் பகுதியில் ரிங் ரோடு அருகே கட்டப்படும் இந்த மைதானம், டிசம்பர் 2025ஆம் ஆண்டு முழுமையடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் மூன்றாவது மைதானம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் வாரணாசியில் 2014 மற்றும் 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “வாரணாசியில் சர்வதேச மைதானம் அமைய உள்ளது. இங்கு, வரும் நாட்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். வாரணாசியில் உள்ள வீரர்கள் மற்றும் மக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த மைதானம் அமையும். கிரிக்கெட் மூலம் இன்று உலகமே இந்தியாவுடன் இணைந்துள்ளது.
வரும் நாட்களில் கிரிக்கெட் விளையாட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய மைதானங்கள் தேவைப்படும். உத்தரப்பிரதேசத்தில் பிசிசிஐ உதவியுடன் கட்டப்படும் முதல் மைதானம் இதுவாகும். வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பிசிசிஜ நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், ஜி விஸ்வநாத், ரவி சாஸ்திரி, மதன் லால், கோபால் சர்மா, சுபாங்கி குல்கர்னி, நீது டேவிட், ரோஜர் பின்னி, சச்சின் டெண்டுல்கர், திலீப் வெங்சர்க்கார், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் அதிகாரிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இது உத்தரப்பிரதேசத்தின் மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகும். இது விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்பை அளிக்கிறது. நாட்டில் விளையாட்டை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது” என்றார்.
இந்த நிகழ்வின்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய வீரர்கள் அணியும் "நமோ" என்று பெயர் கொண்ட ஜெர்சியை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளித்தார்.
இதையும் படிங்க:"மகளிர் இட ஒதுக்கீடு" பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்!