பெங்களூரு:கர்நாடக மாநிலம் துமகுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 6) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடனிருந்தனர்.
இந்த தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருந்தார். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை பிரத்யேக கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க உதவும். அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.