அகமதாபாத்: நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் மத்திய மாநில அறிவியல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்களில் ஈடுபடுவோருக்கு வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதற்கான சூழலை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிஐ (STI - science, technology, and innovation) விஷன் 2047, சுகாதாரம் - அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார வசதி, 2030க்குள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை இருமடங்கு ஆக்குதல், வேளாண்மை- விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பங்கு, தூய்மையான குடிநீர் தயாரிப்பதற்கான புதிய கண்டுபிடிப்பு, அனைவருக்கும் தூய எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களை கொண்டு இந்த மாநாட்டின் அமர்வுகள் நடைபெறவுள்ளன.